Friday, March 29, 2019

சூப்பர் டீலக்ஸ்

மு.கு. கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் கழித்து இங்கு எழுத வைத்த தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி.. புதிதாக வருபவர்கள் இந்த வலைப்பூவின் பழைய பதிவுகளை ஆர்வமிருந்தால் படிக்கலாம். நாங்கல்லாம் அப்பவே அப்படி என சொல்ல விரும்பவில்லை என்றாலும் ஆரண்ய காண்டம் விமர்சனத்தைப் படிக்க --> க்ளிக் <-- i="">
நாம் பேச, விவாதம் செய்ய, சர்ச்சைகள் கிளப்ப நிறைய விஷயங்களை கொட்டியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம் படத்தின் நீட்சியாகக் கூட இதைச் சொல்லலாம். இரண்டு படங்களின் lookம் கிட்டத்தட்ட ஒன்று தான். MCU போல அதே யூனிவர்சில், அதே ஏரியாவில் அக்கம் பக்கம் நடக்கும் கதைகள் என்று கூட புரிந்து கொள்ளலாம். ஆ.கா படத்தை நினைவுகூரும் விஷயங்களும் இந்தக் கதையில் உள்ளது.

கதைகளும், கதாபாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று சேரும் விதம், ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதைக்கு தீர்வு தரும் விதம் இப்படி 'ஆகா' என்று சொல்ல படத்தில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. ஆரண்ய காண்டம் போலவே 70s, 80s, early 90s பாடல்களை பயன்படுத்திய விதம் செம்ம நாஸ்டல்ஜிக். பெரும்பாலான காட்சிகளில் பின்னணியில் ஏதோ ஒரு பாடலோ, வசனமோ ஓடிக்கொண்டே தனியாக வேறொரு கதையை சொல்கிறது. அதையும் தாண்டி யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.

திருநங்கைகள் நடத்தப்படும் விதம், பதட்டத்தில் ஃபகத் பேசும் அரசியல் சார்ந்த வசனங்கள், ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனங்கள் எல்லாம் மாஸ் + க்ளாஸ்.

விஜய் சேதுபதி கதையின் டச்சிங்கான முடிவு (சிறுவன் அஷ்வந்த் கலக்கல்), மிஷ்கின் கதையின் ஃபிலாசஃபி (மதம் பற்றிய வசனங்கள் சாட்டயடி பதிவு தோழி ரேஞ்ச்), 4 டீனேஜ் சிறுவர்களின் கதையில் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத ஒரு ட்விஸ்ட் இப்படி ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு ஹை, ஒவ்வொரு லோ இருக்கிறது. இரண்டாவது பாதியில் கதைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியும் நீளும் விதம் ஓட்டத்தின் சுவாரசியத்தைச் சற்று குறைக்கவே செய்கிறது. ஆனால் படம் முடியும் விதம் இந்தக் குறைகளை மறக்கடிக்கச் செய்யும்.

கலாச்சாரக் காவலர்களை கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களும் படத்தில் உள்ளன. ஆரண்ய காண்டம் படத்தை ஜீரணிக்க முடியாதவர்கள் சூப்பர் டீலக்ஸ் பக்கமே போக வேண்டாம் ப்ளீஸ்.

மற்றபடி இன்னொரு கல்ட் கிளாசிக்கைக் கொடுத்து விட்டு ஓரமாக அமர்ந்து அனைத்து chaosஐயும் கவனித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. நாம் அடுத்த பத்து வருஷத்துக்கு இந்தப் படத்தைப் பற்றி நிறைய பதிவுகளையும், யூடியூப் வீடியோக்களையும் பார்க்கலாம் என நினைக்கிறேன். அவர் நிதானமாக அடுத்த கல்ட் கிளாசிக்கை ஏற்பாடு செய்து கொண்டு வரட்டும். காத்திருப்போம்.

DONT MISS IT !


Tuesday, December 19, 2017

சனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna


(சற்றே நீண்ட பதிவு தான். உங்கள் சனிப்பெயர்ச்சி நன்றாக இருந்தால் பொறுமையுடன் முழுதாக படித்து முடிப்பீர்கள் என நம்புகிறேன்)

கடவுள் நம்பிக்கை இருப்பவன் தான். பயபக்தியில் பின் பாதியை விட முன் பாதி அதிகம். ஆனால் சனிபெயர்ச்சி, ராசிபலனில் எல்லாம் ஒரு probability, calculation இருக்கிறது என்பதைத் தாண்டி எப்போதும் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. என் அம்மாவே நன்றாக ஜாதகம் பார்கக்கூடியவர். அவர் பல விஷயங்கள் சொன்னாலும் அதையெல்லாம் ஒரு filter போட்டுத்தான் கேட்டுக்கொள்வேன். அது அவருக்கும் தெரியும்.

ஜாதகத்தை நம்பி, முழுமனதாக அதையே பின்பற்றி முடிவுகள் எடுத்ததோ, பெயர்கள் மாற்றியதோ இல்லை
.
எந்தவொரு பெயர்ச்சி வந்தாலும் இணைய ஊடகங்களுக்கு நல்ல வேட்டை தான். இன்று சனிப்பெயர்ச்சி. சில நாட்களுக்கு முன்பே எங்கள் தளத்தில் இதற்கான ராசிபலன் வீடியோ, கட்டுரை என அனைத்து வடிவங்களிலும் வந்தாகிவிட்டது. ஆனால் எனது ராசிக்கு (ரிஷபம்) என்ன யோகம், என்ன பிரச்சினை, எத்தனை மார்க், எதிலெல்லாம் பாஸ் என்று படிக்கவில்லை. ஆர்வமும் இல்லை.

சனிப்பெயர்ச்சி வந்தால் சில நாட்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரியும் என்ற பலரிடம் நம்பிக்கையுள்ளது. சென்ற வாரம் எதுவும் தெரியவில்லையென்றாலும் நேற்று வேலையில் லைட்டாக தெரிய ஆரம்பித்தது. நேற்றிரவிலிருந்து இன்று மதியம் வரை தலைவலியும் விடவில்லை. அப்போதும் இதற்கெல்லாம் சனிப்பெயர்ச்சி காரணம் என்று நினைக்காமல் எனக்கு போதிய திட்டமிடல் இல்லையென்றே நினைத்தேன்.

இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு எப்போதும் பயணிக்கும் சிறிய தெருவில், பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். எதிர்பாராத திருப்பத்தை விட, எதிரிலிருக்கும் திருப்பத்தில் எதிர்பாராமல் வரும் வண்டிகளால் தான் பெரும்பாலும் நமக்கு பிரச்சினை. அதுவும் சிறிய தெருக்களில் 20-30ல் ஓட்டி வந்தாலே வேகமாக வருவது போலத்தான் இருக்கும். அந்த திருப்பதில் திடீரென வந்தவர் ஹாரன் வேறு அடிக்கமால் திரும்ப, சற்று பலமாகவே மோதிவிட்டேன்.

நான் மோதி கீழ விழுந்ததோ, என் பைக்குக்கு அடிபட்டதோ, ”ஏன் சார் இவ்ளோ ஸ்பீடாவா வருவீங்க” என்று எதிரில் வந்து மோதியவர் கூறியதோ பெரியதாக தெரியவில்லை. ஏனென்றால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் மீது நான் விழ, அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். என் வண்டி 2 அடி பின்னால் இருக்க, நான் அந்த பெரியவருக்கு என்ன ஆனதென்று பார்ப்பதற்குள் தெருவில் இருந்த ஒரு சிலர் அவரை தூக்கி உட்கார வைத்திருந்தார்கள்.

எப்படியும் 70 வயதிருக்கும். ’அடடா எதாவது விபரீதம் ஆகாம இருக்கனுமே’ என்று தெரிந்த கடவுளை எல்லாம் வேண்டிக்கொண்டு அவரை அணுகினேன். கீழே விழுந்ததில் அவருக்கு காலில் சிறிய சிராய்ப்பு, இடது கை ஆட்காட்டி விரலில் தோல் கிழிந்து நன்றாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. (சார் வீடு எங்க, ஃபோன் நம்பர் சொல்லுங்க, காஃபி போட்டு தரட்டுமா, வேற எங்கயும் அடி படலயே)

பரபரப்பில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவர் ஒருவாறு சுதாரித்துவிட்டார். வீட்டில் கொண்டு விட்டு விடலாம் என கூட்டத்தில் ஒருவர் யோசனை சொல்ல, வேடிக்கை பார்க்க வண்டியை நிறுத்திய ஒருவர், ’’வாங்க நான் விட்டுர்ரேன் என்றார்’’.

பெரியவர் வீடு அதே தெருமுனையில் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டம். அவரை உட்கார வைத்து வீட்டு வாசலில் இறக்கினோம். (இதற்குள் திருப்பத்தில் என்னை மோதியவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஏன் ஹாரன் அடிக்காமல் வந்தீர்கள் என்ற தார்மீக கேள்வியை என்னால் கேட்க முடியாமல் போனது).

எதிர்பாராமல் நடந்த விஷயம் என்றாலும் ஏனோ அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சொல்லிவிட்டு வரலாம் என்று உடன் சென்றேன். அது டிபிக்கலான திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தன வீடு. அங்கு மாடியில், கிச்சன் ஹால் என்ற இரண்டே அறை வீட்டில் அவர் மனைவி இருந்தார். இவரைப் பார்த்ததும் பதற (சட்டையில் ரத்தம் சிந்தியிருந்தது) எதுவும் பிரச்சினையில்லை என்று நடந்ததை சொன்னேன். உடனே நீங்களே இவருக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி கூட்டிட்டு வந்துடுங்க என்றார்.

கையில் காசில்லை, விழுந்த இடத்தில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்தேன். நம் தலையில் இப்படி கட்டுகிறாரே என்ற சலிப்பும் ஓரமாக இருந்தது. சரி, என்று அவரை காத்திருக்க சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு வந்தேன். பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன்.

போகும் வழியில், பெரியவருக்கு 77 வயது, ஆடிட் அலுவல வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர், அவருக்கு குழந்தை கிடையாது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். டாக்டர் க்ளீனிக்கில் காயத்துக்கு தேவையான முதலுதவி, ஊசி, மாத்திரை என்று தரப்பட்டது. (மொத்த செலவு 400 சொச்சம்).

நல்ல வேளையாக பெரியவருக்கு சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ, வேறு கோளாறுகளோ இல்லை. விழுந்த அதிர்ச்சியும், கை சிராய்ப்பும் மட்டுமே. டாக்டர் பெரியவரின் கை கால்களை நன்றாக ஆட்ட வைத்தும், BP செக் செய்தும் பார்க்க, பெரியவர் நார்மல் என்பது தெரிந்தது. சற்று நிம்மதியாயிருந்தது. பிறகு அவரை மீண்டும் வீட்டில் கொண்டு விட்டு, அவர் மனைவியிடம் கொடுத்திருந்த மருந்தை பற்றி கூறிவிட்டு வந்தேன். "சனிப்பெயர்ச்சி இப்படி பண்ணிடுச்சே” என்று அவர் கூறியது சினிமேட்டிக்காக இருந்தது.

என் வலது காலில் சிறிய உள்+வெளி காயம். என்னை விட, என் வண்டிக்கு நல்ல அடி. பின் சக்கர பிரேக், சைட் ஸ்டாண்ட் போல வளைந்து திரும்பியிருந்தது. வலது பக்கத்தில் க்ளட்சும் லைட்டாக வாங்கியிருந்தது. சரி இது பரவாயில்லை, சரி செய்து கொள்ளலாம். பெரியவருக்கு வேறெதுவும் பிரச்சினை ஆகாமல் இருந்ததே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன்.

வண்டி மோதி விழும்போது கூட ஒருவேளை இதெல்லாம் சனிப்பெயர்ச்சியின் பலன் தானோ என்று நான் நினைக்கவில்லை. அந்தப் பெரியவர் டாக்டரிடம் அவர் பெயரை முழுதாகச் சொல்லும்போது தான் நினைத்தேன்.

அவர் பெயர் C.S.Kannan

("உங்களயே கூட்டிட்டு போக சொன்னேன்னு தப்பா நினைக்காதீங்க. எனக்கு வயசாச்சு. இப்படித்தான் ஒரு வாட்டி நான் அடிபட்டு கீழ விழுந்து யாருமே வர்ல. கைல சிராய்ப்பு ஆகி கடைசில 10,000 கொடுத்து ஆபரேஷன் பண்ணோம்" என்று பெரியவரின் மனைவி பீதி கிளப்பியது தனிக்கதை).