Tuesday, June 29, 2010

விவாதங்களும்.... விமர்சனங்களும்...

இதைப் பற்றி எவ்வளவு பேசினாலும் நமக்கு உரைக்காதென்று நினைக்கிறேன். இருந்தும், எதாவது சொல்லவேண்டும் என்று தோன்றுகிறதே. அதனால், தொடருகிறேன். கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற ரீதியில், விவாதங்களால் விமர்சனங்களா, இல்லை வி.ளால் வி.களா என, இன்று வரை சரியாக கண்டறிய முடியவில்லை. பதிவு என்னவாக இருந்தாலும், அதற்க்கு ஒரு எதிர் வினையை பதிவு செய்தே ஆக வேண்டுமென, பல பேர் இருக்கிறார்கள். அது பொதுவான ஒரு இச்சையாகவே தோன்றுகிறது. ஏனென்றால், எல்லாவற்றைப் பற்றியும் நமக்கு ஒரு கருத்து இருக்கவே செய்கிறது, அதைக் காட்ட வாய்ப்பு கிடைக்கும்போது, நாம் தவறவிடுவதில்லை.

ஒரு கருத்தை, விரும்பி பதிவு செய்யும்போது, அதை நியாயப்படுத்த தேவையில்லை என்பதே என் கருத்து. ஒரே வார்த்தையில் பிடிக்கிறது, பிடிக்கவில்லையென சொன்னால் கூட, சில சமயங்களில் போதுமானதே. இருந்தும், இங்கே மற்றவர்களை நம்பவைப்பது அல்லது கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்ற மறைமுகக் கட்டாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இல்லை, இருப்பாதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். அதற்க்கான காரணங்களை அடுக்குகிறோம். அதற்காகா வரும் எதிர் வினைகளில் சில, எதிரி வினைகளாகக் கூட மாறுகின்றன. பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் என தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு வகையில், இதெல்லாம் நம் மனதில் அல்பமான சந்தோஷத்தைக் கொடுக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

பின்னூட்டங்களும், எதிர் வினைகளும் தவறு என்பது என் கருத்தல்ல. அவை ஒரு வகையில், நம்மைக் கண்காணிக்கும் cctv காமெராக்களைப் போல. நாம் கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நம்மைக் கட்டுபாட்டிற்குள்ளும் வைக்கும். ஆனால், அதே சமயத்தில், பதிவு எழுதுபவர்கள் / பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. யார் எழுதுவதென்பது தெரியாது அல்லவா. ஒரு வகையான அனானிமிட்டி. (சுஜாதாவின் பாலம் சிறு கதையில் இந்த கருத்தைச் சொல்லியிருப்பார்) அதனால், சில சமயங்களில் கருத்துக்களைத் திணிக்க முற்படும்போதுதான் பிரச்சனையே. நானும் பல நேரங்களில் அதை அனுபவித்திருக்கிறேன். (முக்கியமாக சினிமா விமர்சனங்களில், எனக்கே இப்படியென்றால், நம் கேபிளாரின் நிலைமை பாவம்...)

உதா'ரணத்திற்கு' எனது இசை ரசனையை எடுத்துக்கொள்ளலாம். சமீபத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியின் போது, வழக்கம் போல மக்களின் எண்ணங்கள் பலவாறு இருந்தன. முறையாக இசையைக் கற்றவன் என்ற முறையில், எனக்கும் அதில் சில கருத்துக்கள் இருந்தன. அந்நிகழ்ச்சியில் பாடிய ஸ்ரீகாந்த் என்ற சிறுவனைப் பற்றிய எனது கருத்துக்கள், நிறைய எதிர் வினைகளைச் சந்தித்தன. அடிப்படை சங்கீதம் தெரிந்த யாராலுமே சொல்ல முடியும், அந்த சிறுவன் சுமாராகத்தான் பாடினான் என்று. அந்தச் சிறுவனின் திறமையை குறை சொல்லவில்லை. ஆனால், அதில் பாடிய மற்றவர்களை வைத்து பார்க்கும்போது, சங்கீதத்தில், இந்தச் சிறுவன் செல்ல வேண்டிய தூரம், மிக அதிகமானது. இது குறித்து ஆரம்பமான விவாதங்களில் நான் கலந்துகொள்ளவில்லை. யாராவது ஆரம்பித்தாலும், அப்படியா, சரி என்று பேச்சை மாற்றி விடுவேன். அவர்களுடைய வாதம், விஜய் ரசிகர்கள், விஜயின் படத்தை ஆதரித்து பேசுவது போலவே இருந்தது.

பாக்யராஜின் திரைப்படம் ஒன்றில் வரும் எனக்குப் பிடித்த வசனம் "ஒரு முடிவ எடுக்கனும்னு பேச ஆரம்பிச்சா, எதாவது ஒரு முடிவ எடுத்தடலாம், ஆனா மனசுல ஒண்ணும் முடிவு பண்ணிட்டு பேச ஆரம்பிச்சா, அப்படி பேசறதே வேஸ்ட்". இங்கே பெரும்பாலான விவாதங்கள் அப்படிதான் ஆரம்பிக்கின்றன. ஆங்கிலத்தில் "constructive
argument" என்று சொல்லுவார்கள். இங்கு அதுவே முன்னுக்கு பின் முரணான வார்த்தைகளாகிவிட்டன (oxymoron). "இப்போ முடிவா நீ என்ன சொல்ல வர"என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. நான் எதுவுமே சொல்லவரவில்லை. ஒரே ஒரு விஷயம்தான். நம்முடைய நம்பிக்கைக்குரிய விஷயங்கள், மற்றவர்களுடைய விவாதத்திற்குரிய விஷயங்களாக இருக்கக் கூடாது. அப்படி ஆகிவிட்டால், நம் நம்பிக்கையின் மீது நமக்கே சந்தேகம் வந்துவிடும்.


நீ எப்படிடா கார்த்திய தப்பா பேசலாம்

Tuesday, June 22, 2010

ராவணன் பற்றி, ரெண்டே பத்தி...

வழக்கம் போல, பதிவுலகத்திற்கு இந்த வாரம் நல்ல தீனி. அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தா, மகா சொதப்பல். கதை கருமம் எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். அதனால நேரா விஷயத்துக்கு வரேன். இந்த characterization characterization அப்படின்னு ஒண்ணு சொல்லுவாங்க. அதுல தான் பெரிய சிக்கலே. மக்களால, யாரு பக்கம் நியாயம் இருக்குன்னு முடிவுக்கே வர முடியல. விக்ரமுக்கு, ஐஸ பார்த்தவுடனே லவ்வு வந்துருதா?? ஏன்னா, முதல்லையே உசுரே போகுதே பாட்டு வரும். ஒரு எழவும் வெளங்கல. போலீஸ் எதனால விக்ரம அவ்வளவு தீவிரமா தேடறாங்கன்னு காரணமும் சரியா விளங்கல. (அந்த ரெண்டு லைன் வாய்ஸ் ஓவர் போதும், மக்களே புரிஞ்சிக்கணும்னு டைரக்டர் நினைச்சிருப்பாரோ). விக்ரம், மணிரத்னம் படத்துல நடிக்கரோம்னு பிரம்மிப்புலையே நடிச்சிருப்பாருன்னு நினைக்கறேன்.

படத்துல யார் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. ஆனா, மோசமான திரைக்கதை + குழப்பமான characterization படத்தை காலி பண்ணிடுச்சு. வழக்கம் போல, இந்த மணிரத்னம் படமும், டெக்னிகலா சூப்பர். இருந்தும், பல காட்சிகள்ல, ஐஸ்'வரியா'ராய கொஞ்சம் 'கமர்ஷியலா' காமிச்சிருக்க வேண்டாம். ஏதொ, அத நம்பியே படம் எடுத்தா மாதிரி இருக்கு. ஹிட்டான பாட்டேல்லாம் பாதி பாதி வெட்டி, காலி பண்ணிட்டாங்க. கோடு போட்டா + கெடா கெடா பாடல்கள் மட்டும் ஓகே. ரீ ரிக்கார்டிங்கும் அவ்வளவு சிறப்பா இல்லை. சில பல அறிவு ஜீவிகள், மணிரத்னம் சொல்லாத விஷயங்கள கூட புரிஞ்சுகிட்டு, படம் ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க. ஆனா, என்னை மாதிரி பாமர மக்களுக்கு, பெரிய let down. பத்துத் தலைல ஒண்ணு கூட நல்லா இல்லை. விக்ரம் சொல்றா மாதிரி, படம், டன் டன் டன் டண்டணக்கா டன் டன் டன்....    

ஐயையோ, இந்த சீன படத்துல எடுக்கவே இல்லையே...     

Friday, June 18, 2010

சில குழப்பங்கள்....

பொதுவாகவே, ரொம்ப யோசிச்சா, அதனால பல குழப்பங்கள் வரும்னு சொல்லுவாங்க. நம்மைச் சுத்தி நடக்கற சில பல விஷயங்களும், இந்த மாதிரி குழப்பங்களுக்கு காரணமா இருக்கும். அப்படி, நான் கவனிச்ச, தெளிவு பெறாத சில விஷயங்கள தான் இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன்.

குழப்பம் 1
இந்த, கட்டாய மதமாற்ற சட்டம் மாதிரி, கட்டாய ஹெல்மெட் சட்டம் ஒண்ணு எடுத்துட்டு வந்தாங்க. நம்ம அம்பி டிராபிக் ராமாசாமி பேரு கூட அதுல அடி பட்டுச்சு. இப்போ அந்த சட்டம் என்ன ஆச்சுன்னு எனக்கு ஒரே குழப்பம். ஏன்னா, நான் கடந்த ஒண்ணு ரெண்டு மாசமா, ஹெல்மெட் போடாம தான் வண்டி ஓட்றேன். என்னை சுத்தி, பல பேர் அப்படியே. தைரியமா சிக்னல்ல நிக்கறாங்க, போலீஸ் முன்னாடியே நல்லா கைய கால ஆட்டிட்டு போறாங்க. ஆனா, திடீர்னு ஒரு நாள், அவசரமான வேலையா திருவான்மியூர் பக்கம் போயிட்டிருக்கும்போது, ஒரு மாமா புடிச்சு, அவசரத்துல, நியாயம் பேச நேரமில்லாம, அம்பது ரூவா மொய் எழுதிட்டு கிளம்பினேன். திரும்பி அதே வழில வரும்போதும் ஹெல்மெட் இல்லாமா தான் வந்தேன். ஆனா யாரும் தடுக்கலை. இது என்ன எழவு சட்டம்னு, ஒரு ஹேரும் புரியல. யாராவது தெளிவுப்படுத்துங்க. ப்ளீஸ்..போன வாரத்துல ஒரு நாள், நம்ம கேபிளார், ஆட்டோகாரங்களைப் பத்தி ஒரு பதிவு எழுதினாரு. அதுல பின்னூட்டமா, என்னோட இந்த குழப்பத்தை எழுதினேன், பதில் எதுவும் கிடைக்கலை, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

குழப்பம் 2
இதுவும் ஒரு நீதி நியாயம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். கல்வி கட்டணம எல்லா பள்ளிகள்ளையும் இவ்வளவு தான் இருக்கணும்னு ஒரு சட்டம்  வந்துச்சே, அது என்ன ஆச்சு. ஏதொ, நாகர் கோவில், திருநெல்வேலி பக்கம் ரெண்டு மூணு பள்ளிகள், அளவுக்கு அதிகமா கட்டணம் வாங்கறாங்கன்னு கேள்விப்பட்டு நடவடிக்கை எடுத்தாங்களாம். எல்லா பள்ளியும் இப்போ திறந்தாச்சு. சென்னைல இருக்கற எல்லா பள்ளிகல்லையும் இன்னும் பழைய கட்டணம்தான் வசூலிக்கப்படுது. இப்போ அந்த சட்டம் இருக்கா, இல்லையா??  யாராவது கம்ப்ளைன்ட் குடுத்தாதான் நடவடிக்கை எடுப்பாங்களா??? இவங்களுக்கு என்ன தான் பிரச்னை?? மறுபடியும், யாராவது தெ.படுத்துங்க..

குழப்பம் 3
பெண்ணியம் பெண்ணியம்னு நிறைய பேர் பேசறாங்களே, அப்படின்னா என்ன?

குழப்பம் 4
நாத்திகம்னா  அத்திகவாதிகளா குத்தம் சொல்றதா?? அதுவும் முக்கியமா ஒரு மதத்தை மட்டும் குறிவெச்சு தாக்கனுமா?? ஆத்திகவாதிகள் என்ன செய்யறாங்க?? ஒரு காலத்துல வாழ்ந்ததா நம்பப்படுற சிலரை கடவுளாய் பாக்கறாங்க. மூதாதையர்கள், முனிவர்கள் எழுதி வெச்சிட்டு போன வேதங்களை படிக்கறாங்க. முடிஞ்ச வரை அதை கடை பிடிக்கறாங்க. அப்படி பார்த்தா, இந்த நாத்திகமும் ஒரு வகைல மதம் தான?? நூறு வருடங்களுக்கு அப்பறம் வர சந்ததி, நாத்திகத்தை எப்படி அணுகுவாங்க ?? இவங்க இப்போ எழுதற புத்தகங்கள், வெக்கற சிலைகள் எல்லாத்தையும் என்ன பண்ணுவாங்க?? யாரோ எழுதிவெச்சது, எல்லாம் மூட நம்பிக்கை, பகுத்தறிவு வேணும் அப்படி இப்படின்னு அவங்களும் இதே மாதிரி உளறுவாங்களா ??? அப்படிபார்த்த இப்போ இவங்க சொல்றது எல்லாமே வேஸ்ட். பாவம் நாத்திக மதம்.... (வழக்கம் போல நாத்திகவாதிகள், மொக்கையா பின்னூட்டம் போடாம, புள்ளகுட்டிங்கள போய் படிக்க வைங்க)

குழப்பம் 5
சுறா, வேட்டைக்காரன் எல்லாம் ஹிட்டா???

குழப்பம் 6
நான் எப்படி இவ்வளவு மார்க் எடுத்து பாஸ் பண்ணேன்??

குழப்பம் 7
அடுத்து என்ன பண்ணப் போறேன்.

குழப்பம் 8
அடுத்து என்ன பதிவு போடறது??

குழப்பம் 9 
இந்த பதிவுக்கு, பின்னூட்டமும், வாக்குகளும் கிடைக்குமா கிடைக்காதா???

இப்போ புரியுதா?? என் வழி, தனி வழி.....