Thursday, November 12, 2015

சகிப்பின்மை - விமர்சனங்கள் - ரசனைகமல்ஹாசனின் தூங்காவனம் படத்துக்கு கிடைத்து வரும் கலவையான விமர்சனங்கள் குறித்து அவரே கவலைப்படுவாரா என்பது சந்தேகம். ஆனால் உலக நாயகனின் ரசிகக் கண்மணிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. 

வழக்கம் போல, படம் பிடிக்காதவர்களை தேடிச் சென்று உனக்கு ரசனையில்லை, ஹாலிவுட் தர படத்தை குறை சொல்லக் கூடாது, எதிர்காலத்தில் இந்தப் படம் பாராட்டப்படும்  என்று சாஃப்டாக சொல்வதிலிருந்து, சாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுவது வரை இணையத்தில் போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதில் வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற செய்தி கண்டிப்பாக அவர்களை இன்னும் நோகடித்திருக்கும்.

தமிழ் சினிமாவுக்கு வேதாளங்கள் தேவையா, தூங்காவனங்கள் தேவையா என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலில் தமிழ்நாட்டுக்கு சினிமாவே தேவையா என்பதிலிருந்தே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

சினிமாவால் எந்த சமுதாயமும் இதுவரை திருந்தியதாகத் தெரியவில்லை. ஆனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் சினிமாவைப் பார்த்து தவறான முன்னுதாரணங்களால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திரையரங்கில் சென்று படம் பார்க்கும் போது அந்தப் படம் என் கலை ரசனையை மேம்படுத்த வேண்டாம், உலகத் தரத்துக்கு என் பார்வையை உயர்த்த வேண்டாம். அதற்கு நான் புத்தகங்களையும், சினிமா அல்லாத மற்ற ஊடகங்களையும் நாடித் தெரிந்து, தெளிந்து கொள்கிறேன்.

இன்றைய நிலையில் கொடுத்த 120+35+30 ரூபாய்க்கு எனக்கு பொழுதுபோக்கு மட்டுமே போதும். படம் போரடிக்காமல் இருந்தால் நன்று, அது சற்று தரமான பொழுதுபோக்காக இருக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பு. அவ்வளவே.

உலகத் தரப் படத்தை ரசிக்கத் தெரியவில்லை, புதிய முயற்சிகளை பாராட்டவில்லை என்று, குறைந்த பட்சம் ஓ!@#$ என்ற கெட்ட வார்த்தையோடு ஆரம்பித்து மற்றவர்களை திட்டும், மேம்பட்ட படைப்புகளை மட்டுமே ரசிப்பவர்கள், முதலில் மற்றவர்களது ரசனையை குறை கூறுவது அநாகரிகம், அசிங்கம் என்று உணர்வார்களாக.

மற்றவர்களது கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள், ஏற்றுக் கொள்ளத் தெரியாதவர்கள் எந்த கருத்தை சொல்லவும் தகுதியற்றவர்களே. இதுவும் ஒரு வகையில் சகிப்பின்மையே.

பி.கு. மன்னிக்கவும், திருப்பிக் கொடுக்க கையில் விருதுகள் இல்லை.

#சகிப்பின்மை
#சகிப்புத்தன்மை
#intolerance 

Sunday, March 29, 2015

மற்றும் பல - 29/03/2015

உத்தமவில்லன் படத்தின் நடனக் காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது.. கமலின் கொள்கைகளில் என்றைக்குமே ஒத்துப்போகாத ஆளாக இருந்தாலும் கமல் நடிப்பில் பெரிய குறை என எதையும் கண்டதில்லை. ஆனால் இந்த நடனக் காட்சி, சத்தியமாக அவுட் டேடட்... ஒரு கிரேஸ் இல்லாமல், நடனம் தெரியாத ஒரு ஆள் ஆடுவதைப் போல், கடைசியில், கடந்த 25 வருடங்களாக ஆடும் இரண்டு கால்களை தூக்கி குதிக்கும் அந்த ஒரு ஸ்டெப் வேறு... ஆண்டவா....
ஒரே ஆறுதல், முதிர்ந்த வயதில் இளம் ஹீரோவைப் போல காண்பித்துக் கொள்ள முயல்வதைப் போலவே, பூஜா குமார் என்ற முதிர் கன்னி ஒருவரையும் சமமாக கூடவே ஆடவைக்கிறார் கமல்..
அங்கு கலை சமநிலையை எட்டிவிட்டது 

-----------------------------------------------------------------------


நேற்று ஏதொ தந்தி தொலைக்காட்சியில் பேட்டி வந்ததாம்... பார்க்க முடியாமல் போனது. காலையிலிருந்து ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் முக்கால்வாசி பதிவுகள் அதைப் பற்றியே... அந்தப் பக்கத்து கொள்கைகள் என்றைக்குமே நடுநிலையை எட்டியதில்லை.. எவ்வளவோ கோவில்களுக்கு எதிரில் பார்த்த பெரியார் சிலைகளைப் போல, எந்த மசூதிக்கு எதிரிலும் இதுவரை பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும் “கடவுள் இல்லை, இல்லவே இல்லை” போன்ற அரும்பெரும் வார்த்தைகளெல்லாம் அந்த சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கமா எனத் தெரியவில்லை.. இந்து மத எதிர்ப்பு, முக்கியமாக பிராமண / பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே அவர்களின் உயரிய கொள்கையாக, காலங்காலமாக இருந்து வருகிறது. 

இதில் பாண்டே ஏதோ கேள்வி கேட்டு மடக்கிவிட்டாராம், எதிரிலிருந்தவர் முழித்து மாட்டிக்கொண்டாராம்.. இதனால் நடக்கப்போவது என்ன? தந்தி ஒரு பார்ப்பன ஆதரவு ஊடகம், பாண்டே ஒரு பார்ப்பன வெறியன், இவர்களுகெல்லாம் கேள்வி கேட்கத் தெரியாது, மீசையில் எதுவும் ஒட்டவில்லை என்றே அந்தப் பக்கத்திலிருந்து எதிர்வினைகள் வரும். (ஏற்கனவே பல மண் ஒட்டவில்லை பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன)
யார் என்ன நிரூபித்தாலும் ஆரியன் / திராவிடன் / பார்ப்பனன் / ஜாதி வெறி என அரைத்த மாவையே அரைத்து வெறுப்பை மட்டுமேதான் அவர்களால் பரப்ப முடியும். இதில் பகுத்தறிவதுதான் அவர்கள் நோக்கமாம்.. வெங்காயம்

யூடியூபில் இருக்கும் ஒரு கமெண்டில் வேறு, இஸ்லாமியர் ஒருவர் வந்து, இந்து மதத்தில் ஜாதி இருக்கிறது, பலருக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை, மசூதியிலெல்லாம் அப்படியில்லை என்று தன் பங்கிற்கு சம்மந்தமே இல்லாமல் ஆஜராகி சர்வமத வழிபாட்டை நடத்தியுள்ளார். 
இதில் இருக்கும் நகை முரண் நான் விளக்கித் தெரியவேண்டியதில்லை. ஒரே ஆறுதல், இந்த முறை அவர்கள் வாங்கிய மொக்கையும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. உங்களயெல்லாம் உம்மாச்சிதான் காப்பாத்தனும்.. 

-----------------------------------------------------------------------

வலியவன் என்றொரு காவியத்தைக் காண நேர்ந்தது. எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணனை, படத்தில் எங்கேயும், எப்போதும் காண முடியவில்லை. கால்ஷீட் கிடைத்து, கதையே இல்லாமல், 15 கோடி பட்ஜெட்டில் அவசர கதியில் படம் தொடங்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஷூட்டிங் ஆரம்பிக்க பூசணிக்காய் உடைத்ததிலிருந்து யோசித்திருந்தால் கூட ஒரு மாதத்தில் கதை என்று ஏதோ ஒன்று கிடைத்திருக்கும். இவ்வளவு மொன்னையான முதல் பாதியை அண்மையில் எந்தப் படத்திலும் பார்க்கவில்லை. திரைப்படங்கள் பார்ப்பதில் உலக மகா பொறுமைசாலியான நானே சீட்டில் நெளிய ஆரம்பித்துவிட்டேன். அண்ணாசாலை சப்வேயில் அத்தனை கூட்டத்தை, அதுவும் ரிச் கேர்ள்ஸ் கூட்டத்தையும் என் வாழ்க்கையில் என்றைக்குமே பார்த்ததில்லை. படத்தில் ஒரே ஆறுதலான ஆண்ட்ரியாவுக்கு ஹீரோவை நினைத்து ஏங்கும் ஒரு (ஹீரோ ஜெய் என்பது முக்கியச் செய்தி) சோலோ பாடல் வேறு. கலி மேலும் முத்திப்போச்சு.. 

-----------------------------------------------------------------------

உலகக் கோப்பை ஒருவழியாக முடிந்து, ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றாகிவிட்டது. இன்னமும் தோனி, கண்ணீர், பிறந்த குழந்தை, கோலி, அனுஷ்கா சர்மா, நக்மா, கங்குலி, யுவராஜ் சிங் என தேசப்பற்று மிக்க இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புலம்பல்கள் தாங்கவில்லை. இதில் பலர் ஃபேஸ்புக் போராளிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க, ஃபைனலில் ஆஸ்திரெலியாவை ஆதரிக்க ஒரு கூட்டமும், இந்தியாவை வீழ்த்திய ஆஸி.யை எப்படி ஆதரிக்கலாம் என ஒரு கூட்டமும் ஒரே நேரத்தில் கிளம்பியது. நம் நாட்டில் இன்னமும் விளையாட்டை விளையாட்டாகவும், சினிமாவை சினிமாவாகவும் பார்க்கும் பக்குவம் பெரும்பான்மை பொது ஜனத்துக்கு வரவில்லை. வர எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. இதில் படிப்பறிவுள்ள, ஃபேஸ்புக் பயன்படுத்தத் தெரிந்த கும்பல் அதிகம் என்பது கவலையளிக்ககூடிய விஷயம். 

It is a thousand times better to have common sense without education than to have education without common sense என ராபெர்ட் கிரீன் இங்கர்சால் கூறியதைப் போல..........