Thursday, November 12, 2015

சகிப்பின்மை - விமர்சனங்கள் - ரசனை



கமல்ஹாசனின் தூங்காவனம் படத்துக்கு கிடைத்து வரும் கலவையான விமர்சனங்கள் குறித்து அவரே கவலைப்படுவாரா என்பது சந்தேகம். ஆனால் உலக நாயகனின் ரசிகக் கண்மணிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. 

வழக்கம் போல, படம் பிடிக்காதவர்களை தேடிச் சென்று உனக்கு ரசனையில்லை, ஹாலிவுட் தர படத்தை குறை சொல்லக் கூடாது, எதிர்காலத்தில் இந்தப் படம் பாராட்டப்படும்  என்று சாஃப்டாக சொல்வதிலிருந்து, சாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுவது வரை இணையத்தில் போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதில் வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற செய்தி கண்டிப்பாக அவர்களை இன்னும் நோகடித்திருக்கும்.

தமிழ் சினிமாவுக்கு வேதாளங்கள் தேவையா, தூங்காவனங்கள் தேவையா என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலில் தமிழ்நாட்டுக்கு சினிமாவே தேவையா என்பதிலிருந்தே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

சினிமாவால் எந்த சமுதாயமும் இதுவரை திருந்தியதாகத் தெரியவில்லை. ஆனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் சினிமாவைப் பார்த்து தவறான முன்னுதாரணங்களால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திரையரங்கில் சென்று படம் பார்க்கும் போது அந்தப் படம் என் கலை ரசனையை மேம்படுத்த வேண்டாம், உலகத் தரத்துக்கு என் பார்வையை உயர்த்த வேண்டாம். அதற்கு நான் புத்தகங்களையும், சினிமா அல்லாத மற்ற ஊடகங்களையும் நாடித் தெரிந்து, தெளிந்து கொள்கிறேன்.

இன்றைய நிலையில் கொடுத்த 120+35+30 ரூபாய்க்கு எனக்கு பொழுதுபோக்கு மட்டுமே போதும். படம் போரடிக்காமல் இருந்தால் நன்று, அது சற்று தரமான பொழுதுபோக்காக இருக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பு. அவ்வளவே.

உலகத் தரப் படத்தை ரசிக்கத் தெரியவில்லை, புதிய முயற்சிகளை பாராட்டவில்லை என்று, குறைந்த பட்சம் ஓ!@#$ என்ற கெட்ட வார்த்தையோடு ஆரம்பித்து மற்றவர்களை திட்டும், மேம்பட்ட படைப்புகளை மட்டுமே ரசிப்பவர்கள், முதலில் மற்றவர்களது ரசனையை குறை கூறுவது அநாகரிகம், அசிங்கம் என்று உணர்வார்களாக.

மற்றவர்களது கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள், ஏற்றுக் கொள்ளத் தெரியாதவர்கள் எந்த கருத்தை சொல்லவும் தகுதியற்றவர்களே. இதுவும் ஒரு வகையில் சகிப்பின்மையே.

பி.கு. மன்னிக்கவும், திருப்பிக் கொடுக்க கையில் விருதுகள் இல்லை.

#சகிப்பின்மை
#சகிப்புத்தன்மை
#intolerance 

No comments: