Monday, February 29, 2016

ஒரு ராஜா பாடலைப் பற்றிய நீண்ண்ண்ண்ண்ட பதிவு

1000 படங்கள். படத்துக்கு 4 பாட்டுகள் என்றால் கூட (வெகு சில படங்களில் மட்டும் பாடல்கள் கிடையாது) 4000 பாட்டுக்கள். இதில் நம் பெற்றொருக்கு பிடித்தது, நண்பர்களுக்குப் பிடித்தது, டிவி - ரேடியோவில் போட்டுத் தேய்ப்பது என நாம் அறிந்திருக்கும் (அதாவது 90களின் ஆரம்பத்திலும் அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் கேட்டவரை) ராஜா பாடல்கள்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

நான் பாடல்களைத் தேடித் தேடிச் சென்று கேட்பவன். எந்த மொழி பேதமும் கிடையாது. பாடல் நன்றாக இருந்தால் போதும். அதிலும் ராஜா பாடல் என்றால் கூடுதல் சாஃப்ட் கார்னரோடு, அய்யோ பாடல் நமக்கு பிடிக்க வேண்டுமே என்ற நினைப்போடும் கேட்பேன். அப்படி நான் அவ்வபோது புதிதாக தெரிந்து கொள்ளும், டிஸ்கவரி என்று சொல்லுவார்களே, அப்படி டிஸ்கவர் செய்யும் ராஜா பாடல்களில் சில, பல நாட்கள்  - இரவுகள் என் தலைக்கு மேல் ஹெட்ஃபோனிலும், தலைக்குள் என்ஃபோனிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



இதுவே ராஜாவின் பாடல் எனக்குள் நிகழ்த்தும் மேஜிக். மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்கும், அதில் மூழ்கி முத்தெடுப்பீர்கள், மூர்ச்சையாகி வெளியே வருவீர்கள் போன்ற சப்பைக்கட்டுகள் எதுவும் கிடையாது. முதல் முறை கேட்கும்போது பிடித்துவிடும். அங்கிருந்து சில நாட்கள் பித்து. அவ்வளவு தான் இந்தப் ப்ராசஸ்.

(அதே போல பல முறை கேட்டு பிடிக்காத பாடல்கள்களும் இருக்கினறன. அதற்காகவெல்லாம் ராஜாவை விட்டுக் கொடுத்து பேச முடியாது)
புதிதாக ஒரு பாடலைக் கேட்கும்போது, வழக்கம் போல, "எப்படிய்யா இந்த மனுஷன் அப்பவே இதெல்லாம் பண்ணிருக்காரு?"என வரும் கேள்வி, "இந்தப் பாட்டை எப்படி இவ்வளவு நாள் கேட்காம இருந்தேன்?" என வரும் வருத்தம், இப்படி இன்று (காலை) வரை இளையாராஜா என்ற இசைக்கலைஞன் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இன்று, இளையராஜா 1000 நிகழ்ச்சி எவ்வளவு மொக்கையாக இருந்தது என்ற பதிவுகளை ஒரு பக்கம் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஆபிஸ் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போதே, மறுபக்கம் ராஜா எஃப்.எம்மில் (யாரோட யோசனையோ, நல்லா இருக்கட்டும்) எப்போதும் போல அடுத்தடுத்து பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.



முதலில் 'என் தேகம் அமுதம்' ('ஒரு ஓடை நதியாகிறது'' என கூகுளார் சொன்னார்) என்ற பாடல். ஜானகியின் குரலில் மற்றுமொரு பலான பாடல் என்பது கேட்கும்போதே புரிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏனோ வரவில்லை.

அடுத்த சில பாடல்கள் கழித்து, 'மழை வருவது மயிலுக்கு தெரியும்' என்ற பாடல். ராஜாவின் ரொமாண்டிக் சாங் போல ஆரம்பித்தாலும், புதிதான ஒரு தாளத்துக்கு பாடல் மாறியது ('தம்தன தாளம் வரும்' பாடல் தாளத்தைப் போல). ராஜா பாட்டில் எதிர்பாராத இடத்தில் மிருதங்க ஓலி ஆரம்பிக்கும்போது அது தரும் கிக்கே தனி. ஜானகி குரலில் பாடல் ஆரம்பிக்க, கூடவே அந்த தாளமும். பாடலில் சுவாரசியம் கூடியது. 5 நிமிடங்கள் தானே , வேலையைச் சற்று தள்ளி வைப்போம் என சரணத்துக்கு தயாரானேன்.

ஸோலோ வயலின், ஸ்ட்ரிங்க்ஸ், வீணை என ராஜா வழக்கம் போல இண்டர்லுயூடில் விளையாடியிருந்தார். தொடர்ந்து ராஜா பாடல்களைக் கேட்டுப் பழகியவர்களால் கண்டிப்பாக அவரது ஒரு பாடலின் ஓட்டம் எப்படியிருக்கும் என்பதை யூகிக்க முடியும். குறைந்தது மனதுக்குள்ளாவது ஓட்டிப் பார்த்துவிட முடியும். இது அவரது மைனஸோ, குறையோ அல்ல. இது ரசிக்கும்படியான ஒரு ராஜா ஜானரின் க்ளீஷே. (உடனே எஸ்.ஏ.ராஜ்குமார் க்ளீஷே என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு கபீம்குபாம் காத்திருக்கிறது)

ஆனால் இந்தப் பாடலின் சரணம் ஆரம்பிக்கும்போது அது எப்படி போகும் என்பதை யூகிக்க முடியவில்லை. முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ஸ்ட்ரிங்க்ஸ் அடுத்த வரிகளுக்கு லீட் கொடுக்க, அடுத்த 24 நொடிகள், விடாமல் நதி நீர் ஓடுவதைப் போல சீராக மேலே ஏறி இறங்கி வளைந்து நெளிந்து அழகாக மீண்டும் பல்லவியில் முடிந்தது.

ஆச்சரியத்திலும் வரும் வழக்கமான அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டு அந்த சரணத்தை ரீவைண்ட் (வழக்கொழிந்து போன வார்த்தையோ?) செய்து மீண்டும் கேட்டேன். எப்படியும் அடுத்த சரணமும் இதே மெட்டுதான். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய முதல் சரணத்தை இரண்டாம் முறையும் கேட்க வேண்டும் என்ற ஆசை. 'i just wanted to relive that moment' என்பதைப் போல.

அதே பிரவாகம், அதே ஆச்சரியம், அதே கெட்ட வார்த்தை, பல்லவி வந்தது. அடுத்த இண்டர்லுயூட் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்னப் படம், என்ன பாடல், யார் நடித்தது எனத் தேட, ஈஸ்ட்மென் கலரில் கே.ஆர். விஜயா ஓடி வருவது போல ப்ரிவியூ வந்தது. ''மம்மி பிராமிஸ்ஸாக இந்தப் பாடலை பார்க்கும் ஆசை வந்து விடக்கூடாது'' என நினைத்து அந்த பக்கத்தை மூடிவிட்டு மீண்டும் பாடலுக்கு வந்தேன். இரண்டாவது சரணம் ஆரம்பித்தது.
ரெண்டு பத்திக்கு முன்னால் சொன்னதில் 'டிட்டோ'.

முதலில் சொன்னதைப் போல, ''எப்படி இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டது?, பாடப்பட்டது, அதுவும் ஒரே டேக்கில் எப்படி அந்த சரணத்தை முடித்திருக்க முடியும்??, என்ன ராகமாக இருக்கும்???, இவ்வளவு நாள் நம் கண்ணில் (காதில்) எப்படிப் படாமல் போனது????, சே அம்மா அப்பா கூட சொல்லவே இல்லையே'' என கலந்து கட்டிய எண்ணங்கள், கேள்விகள்.

பாட்டின்  'ரிஷி மூலம்' தெரிந்தது. டவுன்லோட் செய்தேன். வேலையை முடித்து விட்டு முதல் வேலையாகப் பாடலை மீண்டும் கேட்டேன். சக ராஜா ரசிகன் நண்பனுக்கும் அனுப்பினேன். ''கண்டிப்பாக அவனும் கேட்டிருக்க மாட்டான். கேட்டிருக்கக் கூடாது. பாடலை அவனுக்கு அறிமுகம் செய்த பெருமை என்னயே சேர வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இந்தப் பாட்டை பிரபலப்படுத்தலாம். ஒரு வேளை நாம் தான் லேட்டோ? இந்தப் பாடல் ஏற்கனவே பிரபலமோ?'' என்றெல்லாம் தேவையில்லாத பல சிந்தனைகள்.

இன்றைய நாளின் வேலைகள் அனைத்தும் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், (வரும் வழியில் என் மொபைலிலும்) ஹெல்மெட்டை அப்படியே வைத்துவிட்டு அம்மா அப்பாவிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேச, நான் நினைத்தது போல அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ''இப்பதான் நீ கேக்கறியா?" என்ற அம்மாவின் கலாய்ப்போடு என் அறைக்கு வந்து, நண்பனுடன் சிறிது நேரம் பாடலைப் பற்றி சாட்டில் சிலாகித்து விட்ட போதும் அடங்கவில்லை.



அந்த நேரம் பார்த்து ஒருவர், ராஜா காப்பியடித்த பாடல்கள் என்ற யுடியூப் லிங்கை பகிர்ந்திருந்தார். அது இன்னும் எரிச்சல் ஏற்ற இதோ இந்த நீண்ட நெடிய பதிவு.

இதற்கு மேல் என்ன சொல்ல? 'நண்டு' படத்தின் இந்திப் பாடல், 'ஆராதனையில்' வரும் ''இளம் பனி துளி'', ''ஒரு குங்கும செங்கமலம்'', 'எச்சில் இரவுகளின்' ''பூ மேலே வீசும் பூங்காத்தே'' இப்படி நான் காலம் கடந்து தெரிந்து, என்னை ஆச்சரியப்படுத்திய பல ராஜா பாடல்கள் வரிசையில் ''மழை வருவது மயிலுக்கு தெரியும்'' பாடலும் சேர்ந்தது.

வரிகளை கவனிக்கும் போது இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமாக இருந்தது. தன் மகனை காணப் போகும் ஒரு தாயின் எண்ணம் எப்படி இருக்கும், அவள் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருப்பாள், எப்படி பதைபதைத்திருப்பாள் என்பதெயெல்லாம் பாடலைப் பார்க்காமல் கேட்டதிலேயே புரிந்தது.

வழக்கமாக நாயகன் நாயகி டூயட், இல்லையேல் பேத்தாஸ் என போர் அடித்துக் கொண்டிருந்தவருக்கு புதிதாக கிடைத்த சிச்சுவேஷன், சோளப் பொறியாக இருந்தாலும், இருந்த பசிக்கு இதுவே போதும் என ஒரு கை பார்த்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் தாங்க் யூ ராஜா!!

அந்தப் பாடல்:



பி.கு - காப்பியடிப்பது எந்த வகையிலும் சரியான செயல் அல்ல. அதை நான் இங்கு நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாத் துறையில் ஒரு கிரியேட்டர் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து, தெரிந்து, உணர்ந்து கொண்டிருக்கிறேன். டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது, இருக்கும் சப்ளையில் ஒன்றிரண்டில் குறைகள் இருக்கலாம். அதிலும் ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு ஒன்பதனாயிரம் பாடல்களைப் போடுவது என்பது சாத்தியம் அல்ல. க்ரியேட்டிவிட்டிக்கு நேரம் தேவை. அப்படி நேரமில்லாத நிலையிலும், நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டும், சில வெளிநாட்டுப் பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே என் யூகம். (கதை வேணும், ஆனா படம் 3 மாசத்துல ஆரம்பிக்கனும், உங்க அவசரத்துக்கு புதுசா கதை வராது, அப்போ இருக்கவே இருக்கு ஒலகப் பட டிவிடி).

ஆனால் சிம்பனி பாடல்கள் தனது இன்ஸ்பிரேஷன் என்பதை ராஜா எங்கும் மறுத்ததாக தெரியவில்லை. அதே போல, எஸ்.டி பர்மன் பாடல் ஒன்று எப்படி படிப்படியாக இஞ்சி இடுப்பழகி ஆனது என கமல்ஹாசன் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பரவலாக பல பாடல்கள் தழுவப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ராஜாவிடம் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது என்பதை ஒழுங்காக இசை தெரிந்த எவரும் ஒப்புக் கொள்வார்கள்.  என்பது திண்ணமோ திண்ணம். 

No comments: