ஒரு கருத்தை, விரும்பி பதிவு செய்யும்போது, அதை நியாயப்படுத்த தேவையில்லை என்பதே என் கருத்து. ஒரே வார்த்தையில் பிடிக்கிறது, பிடிக்கவில்லையென சொன்னால் கூட, சில சமயங்களில் போதுமானதே. இருந்தும், இங்கே மற்றவர்களை நம்பவைப்பது அல்லது கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்ற மறைமுகக் கட்டாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இல்லை, இருப்பாதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். அதற்க்கான காரணங்களை அடுக்குகிறோம். அதற்காகா வரும் எதிர் வினைகளில் சில, எதிரி வினைகளாகக் கூட மாறுகின்றன. பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் என தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு வகையில், இதெல்லாம் நம் மனதில் அல்பமான சந்தோஷத்தைக் கொடுக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
பின்னூட்டங்களும், எதிர் வினைகளும் தவறு என்பது என் கருத்தல்ல. அவை ஒரு வகையில், நம்மைக் கண்காணிக்கும் cctv காமெராக்களைப் போல. நாம் கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். நம்மைக் கட்டுபாட்டிற்குள்ளும் வைக்கும். ஆனால், அதே சமயத்தில், பதிவு எழுதுபவர்கள் / பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு வசதி இருக்கிறது. யார் எழுதுவதென்பது தெரியாது அல்லவா. ஒரு வகையான அனானிமிட்டி. (சுஜாதாவின் பாலம் சிறு கதையில் இந்த கருத்தைச் சொல்லியிருப்பார்) அதனால், சில சமயங்களில் கருத்துக்களைத் திணிக்க முற்படும்போதுதான் பிரச்சனையே. நானும் பல நேரங்களில் அதை அனுபவித்திருக்கிறேன். (முக்கியமாக சினிமா விமர்சனங்களில், எனக்கே இப்படியென்றால், நம் கேபிளாரின் நிலைமை பாவம்...)
உதா'ரணத்திற்கு' எனது இசை ரசனையை எடுத்துக்கொள்ளலாம். சமீபத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியின் போது, வழக்கம் போல மக்களின் எண்ணங்கள் பலவாறு இருந்தன. முறையாக இசையைக் கற்றவன் என்ற முறையில், எனக்கும் அதில் சில கருத்துக்கள் இருந்தன. அந்நிகழ்ச்சியில் பாடிய ஸ்ரீகாந்த் என்ற சிறுவனைப் பற்றிய எனது கருத்துக்கள், நிறைய எதிர் வினைகளைச் சந்தித்தன. அடிப்படை சங்கீதம் தெரிந்த யாராலுமே சொல்ல முடியும், அந்த சிறுவன் சுமாராகத்தான் பாடினான் என்று. அந்தச் சிறுவனின் திறமையை குறை சொல்லவில்லை. ஆனால், அதில் பாடிய மற்றவர்களை வைத்து பார்க்கும்போது, சங்கீதத்தில், இந்தச் சிறுவன் செல்ல வேண்டிய தூரம், மிக அதிகமானது. இது குறித்து ஆரம்பமான விவாதங்களில் நான் கலந்துகொள்ளவில்லை. யாராவது ஆரம்பித்தாலும், அப்படியா, சரி என்று பேச்சை மாற்றி விடுவேன். அவர்களுடைய வாதம், விஜய் ரசிகர்கள், விஜயின் படத்தை ஆதரித்து பேசுவது போலவே இருந்தது.
பாக்யராஜின் திரைப்படம் ஒன்றில் வரும் எனக்குப் பிடித்த வசனம் "ஒரு முடிவ எடுக்கனும்னு பேச ஆரம்பிச்சா, எதாவது ஒரு முடிவ எடுத்தடலாம், ஆனா மனசுல ஒண்ணும் முடிவு பண்ணிட்டு பேச ஆரம்பிச்சா, அப்படி பேசறதே வேஸ்ட்". இங்கே பெரும்பாலான விவாதங்கள் அப்படிதான் ஆரம்பிக்கின்றன. ஆங்கிலத்தில் "constructive
argument" என்று சொல்லுவார்கள். இங்கு அதுவே முன்னுக்கு பின் முரணான வார்த்தைகளாகிவிட்டன (oxymoron). "இப்போ முடிவா நீ என்ன சொல்ல வர"என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. நான் எதுவுமே சொல்லவரவில்லை. ஒரே ஒரு விஷயம்தான். நம்முடைய நம்பிக்கைக்குரிய விஷயங்கள், மற்றவர்களுடைய விவாதத்திற்குரிய விஷயங்களாக இருக்கக் கூடாது. அப்படி ஆகிவிட்டால், நம் நம்பிக்கையின் மீது நமக்கே சந்தேகம் வந்துவிடும்.
நீ எப்படிடா கார்த்திய தப்பா பேசலாம்