நிறைய யோசிப்பவர்கள் நிறைய கோட்டை விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஊரே, "ஆஹா, என்ன அறிவாளிப்பா நீ.. உன்ன மாதிரி ஒரு புள்ள கெடைக்குமா" என்று போற்றப்படும் ஆட்கள் எல்லாம் கண்டிப்பாக சில்லித்தனமான முறையில் தங்களது முட்டாள்தனத்தை காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவமும், ஒரு கதையும் கைவசம் உள்ளது. முதலில் கதை
பிரபலமான விஞ்ஞானி ஒருவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் அடிக்கடி இரண்டு பூனைகள் வந்து செல்வதைக் கண்டார். பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் சில தொல்லைகளை பொருத்துக் கொள்ள முடியாதோ என்னவோ. பெரியது ஒன்று, சிறியது ஒன்று என அந்தப் பூனைகள் போடும் அட்டாகசங்கள் தாள முடியவில்லை. முக்கியமாக அவை கூடத்திற்குள் வர முயற்சிக்கும்போது ஏற்படுத்தும் சேதாரங்களே அதிகம். அவற்றை விரட்ட முடியவில்லை என்பதால், உள்ளே வருவதில் தானே பிரச்சனை, அதற்கு ஒரு வழி செய்யலாம் என முடிவு செய்து, தனது கூடத்தின் கதவில் ஓட்டை போட முடிவு செய்தார்.
பெரிய பூனைக்கு பெரிய ஓட்டையும், சிறிய பூனைக்கு சிறிய ஓட்டையும் !!!!!
படித்ததும் புரிந்தவர்கள், சிறிது யோசித்து "அட" என நினைத்து புரிந்தவர்கள், இன்னமும் புரியாதவர்கள் எல்லாரும் அடுத்து சம்பவத்தைப் படிக்கலாம்.
ஒவ்வொரும் மாதமும் என் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு தருவது வழக்கம். அந்த மாதம் சம்பளம் வந்த பிறகும் ஏதோ காரணங்களால் ஏடிஎம் சென்று எடுத்து வர முடியவில்லை. என் அண்ணன் மகளுக்கு நெட் பாங்கிங் முறையில் தான் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பதால் எனது அக்கவுண்டிலிருந்து கட்டிவிட்டேன். பதிலாக என் அண்ணன், காசை என் கையில் கொடுத்து விட்டான். இந்தப் பணமும், வீட்டிற்கு தரும் பங்கும் ஏறக்குறைய ஒரே அளவுதான். சரி, கத்தையாகப் பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் அதை எனது அக்கவுண்டில் டெபாஸிட் செய்துவிட்டு, வீட்டிற்கு தேவையான காசை எடுக்கலாம் என முடிவு செய்தேன். பேங்க் புறப்படும் வரை யாரும் எனது முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டவில்லை.
பேங்கிற்கு சென்று, வரிசையில் நின்று, அக்கவுண்டில் பணத்தை செலுத்திவிட்டு, கீழே வந்து ஏடிஎம் மில் வீட்டிற்காக காசு எடுக்கலாம் என நினைக்கும்போது தான் உறைத்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று !!!
இன்னமும் உறைக்காதவர்கள் எனக்குப் போட்டியாக வரலாம், புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்.. எனக்கும் அந்த விஞ்ஞானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வளவே..