Saturday, July 27, 2013

EA - சில அலட்சியங்கள்....


ஃபேஸ்புக்கில், நண்பர் கேபிளாரும், சுரேகா அவர்களும் ஆரம்பித்த குழுமம், கேட்டால் கிடைக்கும். வாடிக்கையாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வை, வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள். இன்று, அந்த குழுமத்தில் இருக்கும் பலர், அவர்கள் கேட்டுப் பெற்ற அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். சில பதிவுகளைப் பார்த்து, நானும் பல புதிய தகவல்களை மண்டையில் ஏற்றியிருக்கிறேன். இன்று, எனக்கு நேர்ந்த அனுபவத்தினால், சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அவற்றை அங்கே பதிவிட்டு, இங்கே காபி பேஸ்டுகிறேன். இதைப் படிக்கும் அன்பர்கள், இப்பதிவை முடிந்த வரை, மற்றவரிடத்தில் பகிருங்கள். நன்றி.  
//இங்கு பலர், எக்ஸ்பிரஸ் அவென்யூவில், அவர்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அங்கு கேட்டு கிடைத்த சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளனர். இதோ, இன்று என் முறை.

புதிதாக ஆடை வாங்க, பல நாட்களாக திட்டமிட்டு, முடியாமல், வேறு வழியில்லாமல், நேரமின்மையால், பக்கத்தில் இருக்கும் EAவிற்கு செல்லலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். நண்பருக்கு, பசித்ததால், முதலில், அங்கு பேஸ்மன்ட் 1ல் இருக்கும் பிட் ஸ்டாப் எனும் கடைக்குச் சென்றோம்.


1. நண்பர் சாப்பிட்டார். நான் தண்ணீர் கேட்கப் போக, வழக்கம் போல, தண்ணீர் கொடுப்பதில்லை என்றும், பாட்டில் தான் வாங்க வேண்டும் என்றும், கிளிப்பிள்ளை போலக் கூறினார் கல்லாவில் இருந்த அப்பாவி இளைஞர். “வர கஸ்டமருக்கு ஃப்ரீயா தண்ணி தர வேண்டியது உங்க கடமை, உங்க மேனஜருக்கு சொல்லுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றோம். கண்டிப்பாக வேறொரு சந்தர்பத்தில், கேட்டு வாங்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன் (என் பிரச்சனை, நேரமின்மை). அடுத்து, இரண்டாவது தளத்தில் இருக்கும் மேக்ஸ் என்ற கடைக்குச் சென்றோம்.

2. 2000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கிவிட்டு, வெளியே வரும்போது, அங்கிருந்த ஃப்ளெக்ஸில், 1400 ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு 200 மதிப்புள்ள வவுச்சர் தரப்படும் என்ற விளம்பரம் இருந்தது. மீண்டும் நான் உள்ளே சென்று, கவுண்டரில் இருந்தவரிடம் “வவுச்சர் இருக்குன்னு போட்டிருக்கீங்க, எதுவும் தரலியே”

“அது maxx ப்ராடக்ட்ல மட்டும்தான் சார்”

“ஆமாம், பாருங்க, நான் வாங்கினது எல்லாம் உங்க பிராண்ட் தான்” என எடுத்த ஆடைகளை எடுத்து காமிக்க. எனக்கு பில் போட்ட நபரைக் கூப்பிட்டு, “சரியா பார்க்க மாட்டியா, எடுத்து குடு” என சொல்ல, அவர் வவுச்சர் எடுக்க சென்றார்.
நான் விடாமல் அவரிடம் “ஏன் சார், கஸ்டமருக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைதான, அவங்க வந்து கேட்கற அளவுக்கு வெச்சீப்பீங்களா”

”நாங்க செக் பண்றோம் சார், இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சு, சாரி” என சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். கேட்டு கிடைத்த வவுச்சருடன் திரும்பினோம்..
 
 3. அடுத்து, பார்க்கிங்க் கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்த நபர்

“70rs சார்” என்றார்.

நான் “எவ்வளவு நேரம் ஆகிருக்கு” என கேட்க

“3rd hourல வெளிய வந்துருக்கீங்க” என பதில் வந்தது

"அதுக்கு 50rs தான? weekendலதான 70” என கேட்டேன்.

“ஆமா சார், 50 ரூபாதான்” என சொல்லிவிட்டு, கொடுத்த 100 ரூபாய்க்கு, 50 ரூபாய் மிச்சம் தந்தார். வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

1. இதில் எவ்வளவு வாடிக்கையாளர்கள், தண்ணீர் கொடுக்க வேண்டியது உணவகத்தின் பொறுப்பு என்பதைத் தெரியாமல் இருப்பார்கள்? இருக்கிறார்கள்? இன்றும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

2. என்னைப் போல, பார்த்து கேட்காமல் போனவர்களால், மேக்ஸ் நிறுவனத்திற்கு, எவ்வளவு 200 ரூபாய் வவுச்சர்கள் லாபத்தில் சேர்ந்திருக்கும்?

3. எப்படியும் மால்களில் பார்க்கிங்க் கட்டணம் அதிகம் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் எவ்வளவோ நண்பர்கள், சரியாகப் பார்க்காமல், 70 ரூபாயை கொடுத்து விட்டு வந்திருக்கலாமே?

கேட்டால் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எப்படி கேட்பது, எதையெல்லாம் கேட்பது என்பது பற்றிய விழிப்புணர்வு, பெரும்பாலனவர்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த குழுமத்தில் இருக்கும் சக உறுப்பினர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என, ஒரு குறுகிய வட்டத்திலேயே விழிப்புணர்வு இருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை வாடிக்கையாளர் விழிப்புணர்வு பற்றிய தகவல்களை, இன்னும் பல்லாயிரம் பேருக்குத் தெரிவிக்க, வேறேதேனும் வழியுள்ளதா? ஃபேஸ்புக் பயன்படுத்தாத பெரும்பான்மையினருக்கு இதைக் கொண்டு செல்வது எப்படி? இதைப் பற்றி ஏற்கனவே யாராவது இங்கு பேசியிருக்கிறார்களா ? அதற்கான தீர்வு ஏதேனும் கிடைத்ததா?
//

No comments: