Writers Block, சோம்பேறித்தனம், மெத்தனம் இதில் எது என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தோன்றவில்லை, அதனால் எழுதவில்லை. இதுவே காரணம்.
ஏன் தோன்றவில்லை?
ஒரு வேளை நான் மந்தமாகிவிட்டேனோ என்னவோ. என் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது ஏதோ வாழ்ந்து கெட்ட குடும்பம் போல தோன்றுகிறது. முன்பெல்லாம் அவ்வபோது ஏதோ ஒன்றை எழுதி வந்துள்ளேன். ஆரம்பித்த வருடத்தில் 59, அடுத்த வருடம் 58, அடுத்து 36 என பதிவுகளின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 2+ வருடங்களாக நான் எழுதிய பதிவுகள் மொத்தமே 10 தான். எழுதும் ஆர்வம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது இங்கே எதிரொலிப்பது இல்லை. இனிமேல் நமக்கு முன்பு போல் எழுதவே வராதோ என்று கூட பயம் வருகிறது. மேலும் மேலும் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வழக்கம் போல எழுதாமல் விடவேண்டாம் என்பதால், இதோ. எங்காவது உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
-----------------------------------------------------------------------
பல நாட்கள் கழித்து ஒரு முழுமையான மாஸ் பட அனுபவத்தை வேலையில்ல பட்டதாரி தந்தது. என் நினைவுக்கு எட்டிய வரை, கடைசியாக தூள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த உணர்வு இருந்தது. தேவியில், மொத்த அரங்கமே கொண்டாடிய படம் அது. அந்த அனுபவத்திற்காகவே அங்கு மேலும் இரண்டு முறை பார்த்தேன். அப்படித்தான் இருந்தது வே. ப. படத்தின் பாடல்கள் வந்த நாள் முதல் ஒட்டிக்கொண்டு விட்டது. படமும் அப்படியே. இன்று திரைப்படம் என் போன்ற ரசிகர்களினால் 50 கோடியை தாண்டியுள்ளது. harmless entertainment. ஜெயிப்பதில் மகிழ்ச்சியே. முக்கியமான ஒரு சம்பவம். படத்தில் ஒரு கெட்ட வார்த்தை வரும்போது, புரிந்து கொண்டு, நானும், தியேட்டரில் மிகச் சிலருமே கைதட்டிய போது, இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகிவிடும் என்று தோன்றியது.
-----------------------------------------------------------------------
எப்படி வே.ப பார்க்கும்போது தூள் நினைவிற்கு வந்ததோ, அதே போல ஜிகர்தண்டா பார்க்கும்போது சூது கவ்வும் நினைவிற்கு வந்தது. இரண்டு படங்களுமே முற்றிலும் புதுமையான ஒரு அனுபவத்தைத் அரங்கில் இருப்பவர்களுக்கு தந்தன. தமிழ் திரைக்கு புதிய விஷயங்களைத் தந்தன. டேர்டி கார்னிவல் படத்தின் காப்பி என வதந்தி உலவியதால், முதலிலேயே அந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஆனால் ஜிகர்தண்டா பார்க்குபோது அப்படி எந்த ஒரு அம்சமும் ஒத்துப் போகவில்லை. படம் தந்த பிரம்மிப்பில் பல விஷயங்களை சரியாக கவனிக்கவில்லை. மீண்டும் அரங்கில் பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------------
கடந்த சில மாதங்களில் வெளியான எந்தப் பாடல்களும் சகிக்கவில்லையே. என்ன காரணம்?
-----------------------------------------------------------------------
அஞ்சான் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் கிடைத்தலும் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். ட்ரெய்லர் தந்த பயம் அப்படி. இன்று படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பிறகு, "கடவுள் இருக்கான் குமாரு" என்று தோன்றியது. ஏன் இந்தப் படம் ஓடக் கூடாது என நினைத்தேன் என்று தெரியவில்லை. படத்தின் விளம்பரங்களிலிருந்தே ஒரு விதமான திமிர் தெரிந்தது. அதீதமான நம்பிக்கை அல்ல. திமிர் மட்டுமே. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இனி நமது கோலிவுட் மகான்கள் இந்த கமெர்ஷியல் கடுப்புகளைக் கட்டி அழ மாட்டார்கள் என ரசிகர்கள் சிலர் நினைக்கின்றனர். இந்த ஊரில் தான் குருவி, வில்லு, சுறா, ஜில்லா, பட்டத்து யானை, அலெக்ஸ் பாண்டியன், ஏகன், பழனி போன்ற படங்களை எடுத்து, ஊமைக் குத்தாக வாங்கி, வைத்தியம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களா அஞ்சானிலிருந்து தெரிந்து கொள்வார்கள்? ஆயிரம் ஜிகர்தண்டா வந்தாலும் சிலர், அப்படித்தான்.
-----------------------------------------------------------------------
ராஜாவின் நல்ல பாடல்களைப் பகிர்ந்து பல காலம் ஆகிறது. இந்தப் பாடல் தெலுங்கில் 'மரண மிருதங்கம்' என்ற திரைப்படத்திலிருந்து. பாடலில் ஏதோ ஒரு mystery இருப்பது போல தோன்றுகிறது. அதுவே பாடலை (எனக்கு) சுவாரசியமாக்குகிறது. பொதுவாக தெலுங்கு பாடல்களை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்து விட்டு பாடல் பிடிக்காம போய்விட்டால்? இதையும் அப்படியே. பி. சுசீலா, எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல், இதோ...
No comments:
Post a Comment