Sunday, August 17, 2014

'எடை'யப்பா


ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்தரங்களின் மேல், சிறு வயது முதலே எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஈர்ப்பு. இன்று வரை அதன் தொழில்நுட்பம் புரியாமல் இருப்பதால், இன்று வரை அதன் மீதான சுவாரசியமும் குறையவில்லை. பல முறை எடை பார்த்திருக்கிறேன். காலுக்கு கீழே வைத்துப் பார்க்கும் சிறிய அளவிலான எடை பார்க்கும் இயந்திரமாக இருந்தாலும் விட்டதில்லை. ஏறி நின்று (எடை) பார்த்து விட்டுதான் மறுவேலை. 

என்றுமே எடையைக் கூட்டவோ, குறைக்கவோ பெரிய அளவில் நான் முயற்சி செய்ததில்லை. சிறு வயது முதலே ஒல்லியான தோற்றம் என்பதால், அவ்வபோது பாதாம் ட்ரிங், பால், தேன், pedia sure, complan என பல கட்டங்களைத் தாண்டி, நிச்சயமாக எதுவும் தேறாது என முடிவுசெய்து முயற்சிகளை கைவிட்டேன். ஆனாலும் அவ்வபோது எடை பார்த்து, அந்த நொடிக்கு மட்டும் வருத்தமடைந்த சந்தர்ப்பங்கள் வந்தன. முதுகலையில் சேரும்போதும் 49 கிலோ மட்டுமே இருந்தேன். முடியும் போது 52. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை, 10 கிலோ வரை ஏறினேன். "ஒரு வழியா டீசண்டான வெயிட் வந்துட்டோம்" என மனதில் தோன்றியதால், முன்பு போல எடை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

பெசண்ட் நகரில் முருகன் இட்லி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். எடை பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால், அங்கிருக்கும் எடை பார்க்கும் நவீன இயந்திரத்தைப் பார்த்தவுடன், காலும் கையும் குறுகுறுக, ஆசை பீறிட, சில்லறை கடன் வாங்கிக் கொண்டு, இயந்திரத்தில் நின்றேன். 76.3 என வர, என் இதயம் ஒரு முறை நின்றது. அதற்கு முக்கியக் காரணம், சில மாதங்கள் முன்பு நான் இதை விட 10 கிலோ குறைவாக இருந்தேன். 

ஒரு காலத்தில் நான் 50 கிலோ வருவதற்கே அரும்பாடு பட்டுள்ளேன். வேலைக்கு போக ஆரம்பித்த பின், தானாக, இயற்கையாக எடை கூடியதால், பெரிதாக கவலைப் பட்டதில்லை. ஆனால், ஒரேடியாக இந்த 10 கிலோ ஏற்றத்தை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் சில்லைற மாற்றி, மீண்டும் முயற்சித்தேன், இம்முறை 77. 

நின்று போன இதயம் வெடித்தது. கண்கள் கண்ட காட்சியை, மூளை ஏற்க மறுத்தது. நண்பர்களிடம் புலம்பிவிட்டு, வீட்டிற்கு வந்தேன். பேச்சு வாக்கில் அப்பாவிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி ஆனார். தலைக்கனத்தினால் உடல் எடை உயர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. அதனால் அப்பாவுக்கும் குழப்பம். "எக்சர்சைஸ் பண்ணு. இவ்ளோ இருக்க கூடாது. வீட்ல எதாவது வேலை செஞ்சாதான" என்று அவர் பங்கிற்கு ஏற்றிவிட, மேலும் கடுப்பானேன். வழக்கம் போல அம்மா மட்டுமே, இந்த வயதிற்கு இது சரியான எடை தான். கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொன்னார். ஆனால் மனம் ஆறவில்லை. எப்படி 10 கிலோ, எப்படி 10 கிலோ என அதீதமான யோசனை.

சில நாட்களுக்கு முன காதி கிராப்ட் கடையில் இருக்கும் இயந்திரத்தில் எடை பார்த்தேன். பழைய எடையான 67-ஐ காண்பித்தது. அபோதுதான் மனதின் பாரமும் இறங்கியது. மு.இ.கடையில் இருக்கும் இயந்திரம் கோளாறு என முடிவு செய்தேன். இப்போது ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. நீங்கள் யாரும் மு.இ. கடை இயந்திரத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வாழ்க அரசாங்க இயந்திரம் !!

No comments: